
வறுமை அதிகமாகவுள்ள மாவட்டமான நுவரெலிய மாவட்டமே அதிக தேசிய வருமானத்தைப் பெற்று வருவதாக தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்த மக்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தினூடாக அநீதி இளைத்துள்ளதாக மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
புதிய வரவு செலவுத் திட்ட யோசனை தொடர்பாக வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மொத்த தேசிய வருமானமாக 700 பில்லியன் ரூபாவில், 150 பில்லியன் ரூபாவை பெற்றுத் தரும் தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடுகள் வழங்கப்படவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வரவு செலவுத் திட்ட யோசனையின் போது பெருந்தோட்ட மக்களுக்கு அரிசி மானியம் தொடர்பான சிறுகுறிப்பு காணப்பட்டதாகவும் எனினும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் சிறு குறிப்புகள் கூட இடம்பெறவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கான சரியான பதிலை எதிர்வரும் 8ம் திகதிக்குள் மலையகத் தலைமைகள் வழங்காவிட்டால் மலையகத் தோழமை சக்திகளை ஒன்றிணைத்து எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment