.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Friday, November 7, 2008

வன்னி மக்களுக்கு இந்தியா வழங்கவுள்ள நிவாரண அன்பளிப்புப் பொருட்களை எதிர்வரும் வாரமளவில் அங்கு கொண்டுசென்று ஒப்படைக்க நடவடிக்கை - ICRC


வன்னி பிரதேசத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியாவினால் வழங்கப்படவுள்ள அன்பளிப்பு நிவாரணப் பொருட்களை எதிர்வரும் வாரத்தில் அங்குள்ள மக்களுக்கு விநியோகிக்கவுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.


இந்திய அரசினால் வன்னி மக்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரணப் பொருட்களின் தரத்தை ஆராயும் முகமாக கடந்த வாரம் இலங்கையிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று சென்னைக்கு சென்றிருந்ததாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சரசி விஜயரத்ன தெரிவித்தார்.

அங்கு சென்ற இந்த குழுவினர், வன்னி மக்களுக்காக வழங்கப்படவுள்ள நிவாரணப் பொருட்கள் தொடர்பாக அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வன்னி மக்களுக்காக வழங்கப்படவுள்ள நிவாரணப் பொருட்கள் சர்வதேச தரத்தில் அமைந்துள்ளதாகவும், நல்ல தரத்தில் இருப்பதாகவும் பிரதிநிதிகள் குழு வழங்கிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த அன்பளிப்புப் பொருட்களானது வன்னியிலுள்ள மக்களுக்கு ஏற்றவகையிலேயே இருந்ததாகவும், இந்த பொருட்களுடன் அவர்களுக்கு வேண்டிய ஆடைகளும் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த அன்பளிப்புப் பொருட்கள் இன்னும் சில தினங்களில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு கையளிக்கப்படவுள்ளதாகவும், அதனையடுத்து உயர்ஸ்தானிகராலயம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

இந்த அன்பளிப்பு நிவாரணப் பொருட்கள் கிடைக்கும் தாமதத்தில் வன்னி பிரதேசத்திலுள்ள மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் கூறினார்.
இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை தந்து இந்தியா உதவுவது இது இரண்டாவது சந்தர்ப்பமாகும்.

இதற்கு முன்னர் 2004ம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் மக்களுக்கும் இந்தியா நிவாரண உதவிகளைச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: